Published : 26 Aug 2023 06:05 AM
Last Updated : 26 Aug 2023 06:05 AM
சென்னை: சென்னை சூளைமேடு, சக்திநகர் 4-வது தெருவில் வசித்து வருபவர் சந்திரசேகரன் (46). ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலைஇவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, காரில் வந்த 3 பேர் கும்பல், சந்திரசேகரனைத் தாக்கி அவரை காரில் கடத்திச் சென்றது. அவரது ஆட்டோவையும் எடுத்துச் சென்றது.
இதுகுறித்து சந்திரசேகரின் உறவினர்கள் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். முதல்கட்டமாக சம்பவ இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துகடத்தல் கும்பலை பின் தொடர்ந்தனர்.
கோயம்பேடு அருகே ஓரிடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சந்திரசேகரனை போலீஸார் மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட சென்னையை அடுத்த பம்மல் எல்ஐசி காலனியைச் சேர்ந்த சரவண குமார் (40), நாமக்கல் மாவட்டம், எஸ்.நாட்டாமங்கலம் பகுதியைச் சேர்ந்த தேவராஜன் என்ற மணி (39), அதே மாவட்டம் ராசிபுரம் ஆர்.குமார மங்கலத்தைச் சேர்ந்த கார்த்திக் (31) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்திய கார், சந்திரசேகரனின் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன.
கடத்தலுக்கான காரணம்: கடத்தப்பட்ட சந்திரசேகரன் ஏற்கெனவே, சென்னை, ஜாம்பஜார் பகுதியில் முட்டை கடை நடத்தி வந்தார். மேலும், அதே பகுதியில் வீடு எடுத்துத் தங்கி இருந்தார். கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சரவணகுமார் சென்னையில் முட்டை மொத்த வியாபாரம் செய்து வந்தார். இவரது தம்பி தேவராஜன் நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணை நடத்தியதோடு முட்டை மொத்த வியாபாரத்திலும் ஈடுபட்டிருந்தார்.
இவர்கள் இருவரிடமிருந்தும் சந்திரசேகரன் முட்டைகளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். ரூ.8 லட்சம் அளவுக்கு முட்டைகளை வாங்கிவிட்டு பணம் தராமல், சந்திரகேரன் தான் நடத்திவந்த முட்டை கடையை திடீரெனமூடிவிட்டு இரவோடு இரவாக 3 ஆண்டுகளுக்கு முன் தலைமறைவானார். மேலும், அவர் சூளைமேட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டில் ரகசியமாகத் தங்கி ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.
இந்த தகவல் தேவராஜனுக்கு அண்மையில் கிடைத்துள்ளது. இதையடுத்து அவரை நேற்று முன்தினம் கடத்திச் சென்று, பணத்தை வாங்க முயன்றுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT