Published : 25 Aug 2023 06:13 AM
Last Updated : 25 Aug 2023 06:13 AM

சென்னை | ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்து விரக்தி: 6 வயது மகளை கொன்று தந்தை தற்கொலை

சென்னை அயனாவரத்தில் 6 வயது மகள் மானஸாவை கொலை செய்து விட்டு தற் கொலை செய்து கொண்ட கீதா கிருஷ்ணன்.

சென்னை: சென்னை அயனாவரத்தில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த விரக்தியில் 6 வயது மகளைக் கொன்றுவிட்டு, தந்தையும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை அயனாவரம் பூசனம்தெருவைச் சேர்ந்தவர் கீதா கிருஷ்ணன்(50). இஎஸ்ஐ மருத்துவமனையில் தூய்மைப் பணி மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தார். இவரது 6 வயது மகள் மானசா, அயனாவரத்தில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கீதா கிருஷ்ணன் தூக்கிட்ட நிலையில் வீட்டில் இறந்துகிடந்தது தெரியவந்தது. மேலும், வீட்டிற்குள் மானஸா இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த அயனாவரம் போலீஸார் இருவரது சடலங்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: கீதா கிருஷ்ணன் ஆன்லைன் விளையாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார். இதனால் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இது தொடர்பாக அவரது மனைவி கல்பனாவுக்கும், கீதாகிருஷ்ணனுக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

மூத்த மகள் கொலை: 2020-ல் அவர்கள் கோட்டூர்புரத்தில் வசித்தபோது, கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள கீதாகிருஷ்ணன் திட்டமிட்டார். தனதுமூத்த மகள் குணாலினியைக் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். மனைவி கல்பனா, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ஆனால், திடீரென மனம் மாறியகீதா கிருஷ்ணனின் தற்கொலை முடிவைக் கைவிட்டு, இளைய மகள் மானஸாவுடன் தலைமறைவானார். பின்னர் அவரை போலீஸார் கைது செய்தனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்த கீதா கிருஷ்ணன், இளைய மகள் மானஸாவுடன் அயனாவரத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் மீண்டும் ஆன்லைன் விளையாட்டு மோகத்தில் பணத்தை இழந்து கடனாளியான அவர், இளைய மகள் மானஸாவைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

ஆன்லைன் விளையாடு மோகத்தால் ஒரு குடும்பமே உயிரிழந்தது, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x