

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எவ்வித ஆவணமும் இன்றி ரூ.11.98 லட்சம் பணத்தை எடுத்துவந்த ஆந்திராவைச் சேர்ந்த நபரை ஆர்பிஎஃப் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பார்சல் அலுவலகத்தில் ஆர்பிஎஃப் தலைமைக் காவலர் தினேஷ்குமார் நேற்று காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமானமுறையில் ஒருநபர் பையுடன் நின்று கொண்டிருந்தார். அவரைப் பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார். தொடர்ந்து, அவரது பையைவாங்கி சோதித்தபோது, அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது.
உடனடியாக, அவரை ஆர்பிஎஃப் அலுவலகத்துக்கு அழைத்துவந்து, விசாரித்தபோது, அந்த நபர் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்த மாடவாசு(42) என்பதும், அவர் ரூ.11.98 லட்சத்தை எந்தவித ஆவணமுமின்றி ரயிலில் எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த பணத்தை ஆர்பிஎஃப் போலீஸார் பறிமுதல் செய்தனர். அவரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில், வருமான வரித்துறை அதிகாரிகள் விரைந்து வந்து, அப்பணத்தைக் கைப்பற்றி, மாடவாசுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.