திருப்பத்தூர் மாவட்டத்தில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டத்தில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது
Updated on
2 min read

‘இந்து தமிழ் திசை' செய்தி எதிரொலியை தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்கள் 6 பேரை தீவிர குற்ற கண்காணிப்பு பிரிவினர் நேற்று கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏழை, எளிய மக்களை குறிவைத்து காட்டன் சூதாட்டம் நடத்தப்படுகிறது. இதனால், அப்பாவி மக்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை காட்டன் சூதாட்டத்தில் இழந்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் கிடைத்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இதுதொடர்பாக, கடந்த ஜூலை 26-ம் தேதி ‘இந்து தமிழ் திசை' நாளிதழில் விரிவான செய்தி வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்து வரும் காட்டன் சூதாட்டத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான் உத்தரவிட்டார்.

பின்னர், அவரது நேரடி கண்காணிப்பில் ‘தீவிர குற்ற கண்காணிப்பு பிரிவு’ அமைக்கப்பட்டது. இந்த பிரிவில் காவல் ஆய்வாளர் தலைமையில், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் கொண்ட குழுவினர் மாவட்டம் முழுவதும் காட்டன் சூதாட்டம் நடைபெறும் இடங்களில் கடந்த சில வாரங்களாக தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டம் அதிக அளவில் நடைபெற்று வருவது கண்டறியப்பட்டது. விசாரணையில், ஆம்பூர் அடுத்த கம்பிக்கொல்லை பகுதியைச் சேர்ந்த தண்டபாணி (40) என்பவர் காட்டன் சூதாட்டம் நடத்தும் முக்கிய நபராக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரது நடவடிக்கைகளை கண்காணித்த தீவிர குற்ற கண்காணிப்பு பிரிவு காவல் துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்டபாணியை கைது செய்தனர். இதையறிந்த அவரது கூட்டாளிகளும், காட்டன் சூதாட்ட முகவர்களும் தலைமறைவாகினர்.

தொடர்ந்து, நடத்திய தேடுதல் வேட்டையில், காட்டன் சூதாட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்த வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த சங்கர் (45), உமராபாத் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (44), ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த அன்பு (42), திருமாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (50), நடுப்பட்டறை பகுதியைச் சேர்ந்த சசிகுமார்(48) ஆகிய 5 பேரை தீவிர குற்ற கண்காணிப்பு பிரிவு காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

பின்னர், அவர்களிடம் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் பரிசு குலுக்கல் சீட்டு கட்டுகள் 6 மூட்டைகள், பொம்மையில்லாத சீட்டு கட்டுகள் 2,160 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான் கூறும்போது, ‘‘ திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டம், வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை, பரிசு குலுக்கல் போன்றவைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக காட்டன் சூதாட்டம் 90 சதவீதம் ஒழிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 10 சதவீத காட்டன் சூதாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் குற்றச்செயல்கள் நடைபெறுவது தெரியவந்தால் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறை அல்லது அருகாமையில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல, குற்றச்செயல்கள், சமுதாயச் சீர்கேடு போன்ற செயல்களில் யாராவது ஈடுபடுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in