

சென்னை: வேளச்சேரியில் மாணவர் மோதலில் கல்லூரி வளாகத்துக்குள் எதிர் தரப்பினர் மீது பட்டாசு கொளுத்தி வீசிய விவகாரத்தில் 9 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கிண்டி, வேளச்சேரி சாலையில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் 1,000-க்கும்மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். நேற்று முன்தினம் காலை கல்லூரி வளாகத்துக்குள் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.
இதில், ஒரு தரப்பினர் எதிர் தரப்பினர் மீது 2 பட்டாசுகளை அடுத்தடுத்து கொளுத்தி வீசினர்.எதிர் தரப்பினர் ஓட்டம் பிடித்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் கல்லூரி வளாகத்துக்குள் பயங்கர சத்தத்துடன் பட்டாசு வெடித்துச் சிதறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டுகளை வீசிமாணவர்கள் மோதிக் கொண்டதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, அடையாறு துணை ஆணையர் பொன்கார்த்திக் குமார் மேற்பார்வையில் கிண்டி போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
அங்கு வெடித்து சிதறிய பாகங்களை ஆய்வு செய்தனர். இதில் மாணவர்கள் வீசியது திருவிழாக் காலங்களில் பயன்படுத்தப்படும் பட்டாசு எனத் தெரியவந்தது.
கல்லூரியில் பொருளாதாரம் 3-ம் ஆண்டு படித்துவரும் தனுஷ்என்ற மாணவர் கடந்த வெள்ளியன்று கானா பாட்டுப் பாடிய தாவரவியல் படிக்கும் மாணவர்களைக் கேலி, கிண்டல் செய்துள்ளார். அந்த தகராறில் தாவரவியல் மாணவர்கள் தனுஷை தாக்கியுள்ளனர்.
இந்த மோதலின் தொடர்ச்சியாக கல்லூரிக்கு வந்த தனுஷ் மற்றும் உடன் படிக்கும் நண்பர்கள் எதிர்தரப்பு மாணவர்கள் மீது பட்டாசுகளை கொளுத்தி வீசியது தெரியவந்தது. இதுதொடர்பாக 18 மாணவர்களைக் கல்லூரி நிர்வாகம் நீக்கியது.
இந்நிலையில், மோதல் விவகாரம் தொடர்பாக மாணவர்கள் தனுஷ்(19), விகாஷ் (19), மணிகண்டன் (19), வருண் (19), சுந்தர் (19), ஐயப்பன் (19), மதன் (19), தனுஷ்குமார் (19), யுவராஜ் (19) ஆகிய9 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 12 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.