

புதுடெல்லி: ஹரியாணா மாநிலம் நூவில் நடந்த வகுப்புவாத வன்முறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் ஒருவரை செவ்வாய்க்கிழமை நடந்த என்கவுன்ட்டரில் போலீஸார் காலில் சுட்டுப்பிடித்தனர். இந்தச் சம்பவம் நூ மாவட்டத்தின் தாரு பகுதியில் நடந்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டவரான வாஸிம் மீது ஏற்கெனவே கொலை மற்றும் கொள்ளை வழக்குள் உள்ளன. அவரது தலைக்கு ரூ.25.000 பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வாஸிம் தாருவில் உள்ள ஆரவள்ள பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது அவர் நல்காட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒரு நாட்டுத்துப்பாக்கி மற்றும் 5 கார்ட்ரிட்ஜுகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இது இந்த வாரத்தில் நூ வில் நடந்திருக்கும் இரண்டாவது என்கவுன்ட்டர் சம்பவமாகும். ஆக.15-16 க்கு இடைப்பட்ட இரவில் நூ வில் வன்முறையில் ஈடுப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்களை ஒரு சிறிய துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பின்னர் போலீஸார் கைது செய்தனர். இருவரில் ஒருவருக்கு காலில் குண்டு காயம் ஏற்பட்டது. இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நூ மாவட்டத்தின் தாருவின் மலைப்பகுதிக்கு அருகில் உள்ள சாஹோ கிராமத்தில் நடந்தது.
சந்தேக நபர்கள் இருவரும் மோட்டார் பைக்கில் தப்பிச் செல்ல முயன்ற போது அவர்களில் ஒருவரை காலில் சுட்டுப்பிடித்ததாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்கள், ஒரு மோட்டார் பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்று தெரிவித்தனர்.
ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்தை தடுக்க முயன்றதால் ஏற்பட்ட மோதல், கலவரமாக மாறி, பக்கத்து மாவட்டங்களுக்கும் பரவியது. இதில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த இருவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். வாகனங்கள், கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட சொத்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்தப் பின்னணியில் இந்த என்கவுன்ட்டர்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.