வேலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்: 8 மணி நேரத்தில் காஞ்சிபுரத்தில் மீட்ட தனிப்படையினர்

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை, காவல் துறையினரால் மீட்கப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் தாயை சந்தித்து ஆறுதல் கூறிய வேலூர் சரக டிஐஜி முத்துசாமி. அருகில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி உள்ளிட்டோர்.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை, காவல் துறையினரால் மீட்கப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் தாயை சந்தித்து ஆறுதல் கூறிய வேலூர் சரக டிஐஜி முத்துசாமி. அருகில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி உள்ளிட்டோர்.
Updated on
2 min read

வேலூர்: வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தாய்க்கு மயக்க மருந்து கொடுத்து பச் சிளம் ஆண் குழந்தையை கடத்திச் சென்ற தம்பதியை தனிப் படை காவல் துறையினர் காஞ்சிபுரத்தில் கைது செய்து குழந்தையை மீட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி சூரியகலா. இவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கண்ண மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிறகு கருத்தடை அறுவை சிகிச்சைக்காக சூரியகலா வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். சூரியகலாவுடன் குழந்தையும் இருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் (19-ம் தேதி சனிக்கிழமை) மாலை 5.30 மணியளவில் சூரியகலா இருந்த வார்டுக்கு வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சூரியகலாவுடன் நெருங்கி பழகுவது போல் நடித்து, அவருக்கு உணவளித்துள்ளார். அந்த உணவை சாப்பிட்ட சூரிய கலா சிறிது நேரத்திலேயே மயக்க மடைந்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி சூரியகலாவின் ஆண் குழந்தையை அந்த பெண் கடத்திச் சென்றார். சூரியகலா கண் விழித்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து வேலூர் கிராமிய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மருத்துவமனைக்கு விரைந்து சென்ற காவல் துறையினர் விசா ரணை நடத்தினர்.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்னக் குமார் தலைமையில் வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை காவல் துறையினர் அரசு மருத்துவமனையில் பொருத் தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் குழந்தையை தூக்கிக்கொண்டு பெண் ஒருவர் மருத்துவமனையில் இருந்து வெளியே செல்வது அதில் பதிவாகியிருந்தது.

இதைத்தொடர்ந்து, தனிப்படை காவல் துறையினர் நடத்திய விசாரணையில் குழந்தையை கடத்திச் சென்ற பெண் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து குழந்தையுடன் திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏறி தப்பிச்சென்றது தெரியவந்தது. அவர் பயணம் செய்த வழித் தடங்களில் உள்ள (பிற மாவட் டங்கள் உட்பட) 500-க்கும் மேற் பட்ட கண்காணிப்பு கேமராக் களின் காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்து தனிப்படை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இறுதியாக காஞ்சிபுரத்தில் அவர் இருப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக காஞ்சிபுரத்துக்கு விரைந்து சென்ற தனிப்படை காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்ட பத்மா
கைது செய்யப்பட்ட பத்மா

விசாரணையில் அவர், ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப் பாக்கம் அடுத்த அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி பத்மா(30) என தெரிய வந்தது. இதையடுத்து பத்மா மற்றும் அவரது கணவர் திருநாவுக் கரசு ஆகிய இருவரையும் கைது செய்த தனிப்படையினர், அவர் களிடம் இருந்து குழந்தையை மீட்டனர்.

வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய ஐந்து மாவட்ட காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டதால் குழந்தை கடத்தப் பட்ட 8 மணி நேரத்தில் பத்திரமாக மீட்கப்பட்டது. இந்த சிறப்பு மிக்க பணியில் ஈடுபட்ட தனிப்படை காவல் துறையினருக்கு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) கிரண் ஸ்ருதி பாராட்டு தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர் களிடம் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் (பொறுப்பு) கிரண் ஸ்ருதி கூறும்போது,‘‘குழந்தை கடத்தல் விவகாரத்தில் நடத்தப்பட்ட முதற் கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ள பத்மாவுக்கு, திருநாவுக்கரசு இரண்டாவது கணவர் என்பதும், அவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லாததும் தெரிய வந்துள்ளது. அவர்கள் இருவரும் குழந்தைக்கு ஆசைப்பட்டு இந்த செயலில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக, இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in