Published : 20 Aug 2023 04:02 AM
Last Updated : 20 Aug 2023 04:02 AM
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்தவர் மணி(26). இவர் வள்ளுவர் கோட்டம் அருகே காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடையில் கடந்த 2 மாதங்களாக மர்ம நபர்கள் யாரோ கள்ள நோட்டுகளை கொடுத்து மாற்றி வந்ததை ஒரு கட்டத்தில் கண்டுபிடித்த மணி, கடைக்கு வருவோரை கண்காணித்து வந்துள்ளார்.
அப்போது, அவரது கடையில் ரூ.500 கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற பள்ளிக்கரணையை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் அண்ணாமலை (64) என்பவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தார். அவரிடம் போலீஸார் விசாரித்ததில், விருகம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் சுப்பிரமணியன் (52) என்பவர் அறிவுறுத்தலின் பேரில் தான் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வழக்கறிஞர் சுப்பிரமணியனை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்த ரூ.45 லட்சம் அளவிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், அவர் ரூ.5 லட்சம் அளவிலான கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டிருப்பதும் விசாரணையில் தெரிந்தது. மேலும், சுப்பிரமணியன் வடபழனியில் உள்ள ஓர் அச்சகத்தில் கள்ள நோட்டுகளை அச்சடித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அச்சக உரிமையாளர் விருகம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக் (42) என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், சுப்பிரமணியன் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கார்த்திக்கை சந்தித்து சினிமா காட்சிகளில் பயன்படுத்த ரூ.50 லட்சம் நோட்டுகள் அச்சடித்து தர வேண்டும் என்று கூறியதாகவும், இந்த நோட்டுகளை அச்சடிப்பதற்கான பேப்பர் பண்டல்களை சூளைமேட்டை சேர்ந்த வினோத் குமார் (37) என்பவரிடம் கொடுத்து அனுப்பியதாகவும், அவர் தெரிவித்ததாக போலீஸார் கூறினர்.
அச்சகத்துக்கு ‘சீல்’: இதையடுத்து கார்த்திக்கை போலீஸார் கைது செய்து, அவரது அச்சகத்தை பூட்டி சீல்வைத்தனர். வினோத் குமாரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT