

சென்னை: ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் பெர்படா குறிச்சியை சேர்ந்தவர் வெங்கடெஷ் பெருமாள். இவரை கடந்த 17-ம் தேதி செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தனது பெயர் டில்லிபாபு என்றும்,ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும், ஹரிஷ் மற்றும் அனிஷ் ஆகியோருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை உடனடியாக கொடுக்குமாறு கூறி மிரட்டி உள்ளார்.
இதையடுத்து, வெங்கடேஷ் பெருமாள், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு டில்லிபாபு குறித்து விசாரித்துள்ளார். அப்போது, டில்லி பாபு என்ற நபர் அந்த நிறுவனத்தில் வேலை செய்யவில்லை என தெரியவந்துள்ளது. இந்நிலையில், தங்கள் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி யாரோ மிரட்டுவதாக, வெங்கடேஷ் அந்நிறுவனத்தின் இயக்குநர் சரவணமுத்துவிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சரவணமுத்து நுங்கம்பாக்கம் போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், வெங்கடேஷ் பெருமாள், தஞ்சாவூரை சேர்ந்த ஹரிஷ் (27) மற்றும் அனீஷ் (24) ஆகியோருக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டி இருந்திருக்கிறது.
இதனால், ஹரிஷ் மற்றும் அனீஷ், திருவண்ணாமலையை சேர்ந்த மஞ்சு நாத் என்பரின் உதவியுடன் டில்லிபாபுவிடம் கூறி பணம் பெற்று தருமாறு கோரியுள்ளார். இதையடுத்துதான், டில்லிபாபு ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறி அவரை மிரட்டி உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது,
இதையடுத்து, நுங்கம்பாக்கம் போலீஸார், டில்லி பாபு (55), ஹரிஷ் (27), அனீஷ் (24), மஞ்சுநாதன் (34),தஞ்சாவூர் சிதம்பரம் (37), மணிகண்டன் (27), ராமதாஸ் (37) ஆகியோரை கைது செய்தனர்.