

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே நடைபயிற்சியின் போது அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவர் பார்த்திபன் கொலை செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக சேலம், ஆற்காடு நீதிமன்றங்களில் நேற்று 5 பேர் சரணடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் பார்த்திபன்(53). அதிமுகவின் அம்மா பேரவையின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இணைச்செயலாளராக பதவி வகித்து வந்தார்.
இவர் மீது செம்மரங்கள் கடத்தல் தொடர்பாக ஆந்திர மாநில காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகள் தொடர்பாக சிறையிலிருந்த பார்த்திபன் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.
இந்நிலையில், பாடியநல்லூர் அங்காள ஈஸ்வரி கோயில் திடல் அருகே சாலையில் நேற்று முன்தினம் காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் பார்த்திபனை சுற்றி வளைத்து, கத்தி, அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் படுகாயமடைந்த பார்த்திபன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது உடல் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு முடிந்து நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, பார்த்திபனின் உடலுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் நேற்று பிற்பகலில் இறுதி சடங்கு நடைபெற்றது. பார்த்திபன் கொலை குறித்து, செங்குன்றம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் இக்கொலை வழக்கு தொடர்பாக, சென்னை- மகாகவி பாரதி நகரை சேர்ந்த முருகன், செங்குன்றத்தைச் சேர்ந்த சக்திவேல் ஆகிய இருவர் நேற்று சேலம் ஜே.எம்- 2 நீதிமன்றத்திலும் சென்னை- போரூரை சேர்ந்த சக்திவேல், காசிமேட்டை சேர்ந்த மோகன், மணலியை சேர்ந்த கவுரிசங்கர் ஆகிய 3 பேர் ஆற்காடு ஜே.எம். நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். இவர்கள் 5 பேரையும்விரைவில் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளதாகவும் அதன்பிறகே பார்த்திபன் கொலைக்கான காரணம் தெரியவரும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.