

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கள்ளநோட்டு மாற்ற முயன்ற இருவரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 45.2 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் இயந்திரங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக காவல் துறை வெளியிட்ட தகவல்: நுங்கம்பாக்கம், புஷ்பா நகரைச் சேர்ந்த மணி என்பவர், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் பேருந்து நிறுத்தம் எதிரில் காய்கறி கடை நடத்தி வருகிறார். நேற்று (ஆக.17) மாலை மணி காய்கறி கடையிலிருந்தபோது, ஒரு நபர் மணியின் கடையில் காய்கறி வாங்கிவிட்டு, நான்கு 500 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துள்ளார். மணி அதை வாங்கி பார்த்தபோது கள்ளநோட்டு போல சந்தேகம் ஏற்படவே, உடனே அவர், காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில், நுங்கம்பாக்கம் (F-3)போலீஸார் மேற்படி கடைக்கு சென்று விசாரித்தபோது, அந்த நபர் கொடுத்த பணம் கள்ள நோட்டு என தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை செய்தனர்.
போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் பிடிபட்ட நபர், பள்ளிக்கரணை பாலாஜி நகரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை (65) என்பதும், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த இவரது நண்பரும், வழக்கறிஞருமான சுப்ரமணியன் (62) என்பதும் தெரியவந்தது. மேலும் இருவரும் சேர்ந்து விருகம்பாக்கத்தில் ஒரு இடத்தில் பிரிண்டிங் மற்றும் கட்டிங் இயந்திரங்களை வைத்து மேற்படி 500 ரூபாய் கள்ள நோட்டுகளை தயாரித்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த நுங்கம்பாக்கம் போலீஸார், கள்ள நோட்டுகள் தயாரித்த சுப்ரமணியன் மற்றும் அண்ணாமலையை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.45.2 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகள், பிரிண்டிங் இயந்திரம், பேப்பர் கட்டிங் இயந்திரம், பணம் எண்ணும் இயந்திரம் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்கு பின்னர் வெள்ளிக்கிழமை (ஆக.18) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.