

திருச்சி: புதுக்கோட்டையைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் வழக்கறிஞர் நேற்று முன்தினம் இரவு கோவையில் இருந்து ராமேசுவரம் செல்லும் சிறப்பு விரைவு ரயிலில் புதுக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணிக்கு திருச்சி கோட்டை நிலையத்தை ரயில் வந்தடைந்தபோது, தூங்கிக் கொண்டிருந்த பெண் வழக்கறிஞருக்கு ஒருவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திருச்சி ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். ரயில்வே போலீஸார், பாலியல் தொல்லை அளித்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் கருப்பண்ணன் கோவில்காடு பகுதியைச் சேர்ந்த சந்திரபிரசாத் (33) என்பதும், அவர் திருச்சி சேதுராப்பட்டியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுவதும் தெரியவந்தது. அவரை திருச்சி ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.