

செங்கல்பட்டு: சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி நேற்று மதியம் 12 மணியளவில் சென்ற மின்சார ரயில் பரனூர் ரயில் நிலையத்தில் நின்று விட்டு அடுத்த ரயில் நிலையமான செங்கல்பட்டு ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது கரிமேடு பகுதிக்கு ரயில் வந்தபோது இளைஞர் ஒருவர் மின்சார ரயிலை வழிமறித்தார். விபத்தைத் தவிக்கும் நோக்கில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதும், அந்த நபர் ஓட்டுநர் அறைக்கு திடீரென ஏறி அறையை பூட்டிக் கொண்டு அங்கு பணியில் இருந்த ஓட்டுநர்கள் கலாத்தியன், சிகாமணியை தாக்க முயற்சித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ஓட்டுநர்கள் இருவரும் மின்சார ரயிலை லாக் செய்துவிட்டு கீழே இறங்கினர். தொடர்ந்து அந்நபர் கதவை உள்ளே தாளிட்டு பூட்டிக் கொண்டுள்ளார். இதையடுத்து ரயில் ஓட்டுநர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் அந்த நபரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் அந்நபர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (24) என்பதும், எம்.சி.ஏ. முடித்து சிறுசேரியில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
சற்று மனநிலை சரியில்லாதவர் போல் நடந்து கொள்வதாக போலீஸார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.