

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே நடைபயிற்சியின்போது அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவர், மர்ம கும்பால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே உள்ள மொண்டியம்மன் நகர், திலகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (53). இவர், கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பாடியநல்லூர் ஊராட்சி தலைவராக இருந்தார்.
தற்போது அதிமுகவின் அம்மா பேரவையின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இணைச் செயலாளராக இருந்து வந்த பார்த்திபன் மீது செம்மரங்கள் கடத்தல் தொடர்பாக ஆந்திர மாநிலம் - கடப்பா, சித்தூர் காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகள் தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு பார்த்திபனை ஆந்திர போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிறகு அவர், ஜாமீனில் வெளியே வந்தார்.
பார்த்திபனுக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இதில், ஒரு மகன் மருத்துவராகவும், மற்றொரு மகன் வழக்கறிஞராகவும் உள்ளனர். பார்த்திபனின் அண்ணன் நடராஜனின் மனைவி ஜெயலட்சுமி, தற்போது பாடியநல்லூர் ஊராட்சி தலைவராக உள்ளார்.
பாடியநல்லூர் அங்காள ஈஸ்வரி கோயில் திடல் அருகே சாலையில் நாள்தோறும் காலையில், பார்த்திபன் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். நேற்று காலை 6 மணியளவில் சாலையில் பார்த்திபன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அங்கு 3 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்து, கத்தி, அரிவாளால் வெட்டிவிட்டு, தப்பியோடியது. இதில் தலை உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் படுகாயமடைந்த பார்த்திபன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆவடி காவல் இணை ஆணையர் விஜயகுமார், செங்குன்றம் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், சம்பவ இடம் விரைந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, செங்குன்றம் போலீஸார் பார்த்திபனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிறகு, இக்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த செங்குன்றம் போலீஸார், தனிப்படைகள் அமைத்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. கடைகளும் அடைக்கப்பட்டன.