

திருப்பூர்: கட்டிட அனுமதிக்கு ரூ. 2.30 லஞ்சம் பெற்ற வழக்கில், ஊத்துக்குளி அருகே ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் கட்டிட விரிவாக்க பணிக்காக, சுண்டக்காம்பாளையம் ஊராட்சி தலைவர் ஆனந்த் (எ) லோகநாதனை தொடர்பு கொண்டார். அப்போது கட்டிடத்துக்கான அனுமதிக்கு ரூ. 6 லட்சம் கேட்டார். மேலும் முன் பணமாக ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக ராதாகிருஷ்ணன் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். நேற்று மதியம் லஞ்ச பணத்தை கொடுத்தபோது, ஊராட்சி தலைவர் லோகநாதன்(43), ஊராட்சி செயலர் அமிர்தலிங்கம்(35) ஆகியோரை லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் கவுசல்யா தலைமையிலான போலீஸார் கையும், களவுமாக பிடித்தனர்.
இதையடுத்து 2 பேரையும் கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், தொடர்ந்து அவர்களிடம் பல மணிநேர விசாரணையில் ஈடுபட்டனர்.