பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்க முன்னுரிமை: மதுரை சரக டிஐஜி ரம்யாபாரதி உறுதி

மதுரை சரக டிஐஜியாக பொறுப்பேற்ற ஆர்.வி.ரம்யா பாரதி. | படம்: நா.தங்க ரத்தினம்
மதுரை சரக டிஐஜியாக பொறுப்பேற்ற ஆர்.வி.ரம்யா பாரதி. | படம்: நா.தங்க ரத்தினம்
Updated on
1 min read

மதுரை: மதுரை சரக டிஐஜியாக ஆர்.வி. ரம்யா பாரதி நேற்று அவரது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை சரகத்துக்கு உட்பட்ட மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் 88 சட்டம், ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளன. மதுரை, விருதுநகர் மாவட்ட எஸ்பிக்களை மேற்பார்வையிடுவதே டிஐஜியின் முக்கிய பொறுப்பு. சட்டம், ஒழுங்கு பராமரிப்பு நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்படும். பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்க முன்னுரிமை அளிப்பேன்.

தென் மண்டலத்தில் போதைப் பொருட்களுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் தொய்வின்றி தொடரும். காவல் துறையினருக்கு பெரிதும் உதவுபவர்கள் ஊடகத்துறையினர். சரியான தகவல்களை பரப்புவதும், தவறான தகவல்களை முடக்குவதும் தான் ஊடகத் துறையினரின் தலையாய பணி. அவர்களின் ஒத்துழைப்பு அவசியம். ஜாதிய மோதல்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

காவல்துறை பொது மக்களுக்கு நண்பர்கள் தான். ஆனால், தவறு செய்தவர்கள், குற்றவாளிகள் மீது நடவடிக்கை கடுமையாக இருக்கும். காவல் துறையினர் இரவு ரோந்து செல்வது மிக முக்கியம். சென்னையில் நான் இரவு ரோந்து மேற்கொண்டதற்கான காரணங்களை சொல்லி இருந்தேன். அது இங்கும் தொடரும். சட்டம், ஒழுங்கை சரிவர பாதுகாப்பதை கடமையாகக் கருதி செயல்படுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in