

கோவை: கோவை மாநகரில் கடந்த 7 மாதங்களில் 3,013 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆன்லைன் சேவைகள் அதிகரித்துள்ள நிலையில், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற ‘சைபர் கிரைம்’ சார்ந்த குற்றங்களில் சிக்காமல், ஏமாறாமல் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
சைபர் கிரைம் காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நடப்பாண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை மொத்தம் 3,013 புகார்கள் பெறப்பட்டுள்ளன. புகார் மனு மீது விசாரணை மேற்கொண்டு 886 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. 77 புகார்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, 27 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஒரே குற்றச் செயல்முறைகளை கொண்ட 6 குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப் பட்டனர். மேலும், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட புகார் மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து இதுவரை ரூ.81 லட்சத்து 25 ஆயிரத்து 966 புகார்தாரர்களுக்கு திரும்ப கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சமீப காலமாக முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என நம்ப வைப்பது, திருமண செயலிகள், இ-மெயில், நெட் பேங்கிங் ரகசிய குறியீட்டு எண்ணை மாதம் ஒருமுறை மாற்றம் செய்ய வேண்டும் எனக் கூறுவது, ஓ.எல்.எக்ஸ், ஆன்லைன் செயலிகள் வாயிலாக கடன் வழங்குவது, கூகுள் ரிவ்யூ வாடிக்கையாளர் சேவை, டிஜிட்டல் மார்க்கெட்டிங், ஜிஎஸ்டி வரி, சிம்கார்டு, ஸ்காலர்ஷிப் பெற்றுத் தருவதாக கூறுவது, பகுதி நேர வேலை வாய்ப்பு, செயலிகள் மூலம் பரிசுத் தொகை வழங்குவது என பல வகைகளில் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
பொது மக்கள் இதுபோன்ற சைபர் குற்றங்களை நம்பி ஏமாற வேண்டாம். அவ்வாறு ஆன்லைன் மூலமாக மோசடியாக பணத்தை இழந்து விட்டால் உடனே சைபர் கிரைம் அவசர உதவி எண் 1930-ஐ விரைவாக தொடர்பு கொண்டால், இழந்த பணத்தை மீட்டுத் தர உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளத்தின் மூலமும் புகார் அளிக்கலாம்.