

சென்னை: சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா சாக்லெட்டுகளை விற்பனை செய்து வந்ததாக, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை கோடம்பாக்கம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை, பதுக்கல், கடத்தலை தடுக்கமாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, சென்னையில் `போதை தடுப்புக்கான நடவடிக்கை' என்ற சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்த கண்காணிப்பு பணிகளை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர்.
இந்நிலையில், டிரஸ்ட்புரம், மாநகராட்சி விளையாட்டுத் திடல் அருகே ரகசியமாக கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லெட் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோடம்பாக்கம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு ரோந்து சென்ற போலீஸார், சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த இளைஞர் ஒருவரைப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது, அந்த இளைஞர் விற்பனைக்காக கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லெட்டுகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நரன் ரவுட் (24) என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் 5 கிலோ கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட இளைஞர் நரன் ரவுட், கஞ்சா சாக்லெட்டுகளை ஒடிசாவிலிருந்து கடத்தி வந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து விற்பனை செய்து வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.