

மாமல்லபுரம்: தனது சக சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கத்தியால் தாக்கிய புகாரில், நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த அஸ்வினியை கொலை முயற்சி வழக்கில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்துள்ள பூஞ்சேரி நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் அஸ்வினி. கடந்த 2021-ம் ஆண்டு ஸ்ரீதலசயன பெருமாள் கோயிலில் அன்னதானம் சாப்பிட சென்றபோது, அஸ்வினுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அஸ்வினி சமூக ஊடகங்களில் வெளியிட்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, அதே கோயிலில் அஸ்வினியுடன் அமர்ந்து உணவருந்தினார்.
அப்போது தங்களது நரிக்குறவர் குடியிருப்புகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். இதைத் தொடரந்து அந்த கிரமாத்துக்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அப்பகுதியில் வசிக்கும் இருளர் மற்றும் நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்த 283 பயனாளிகளுக்கு ரூ.4.53 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், அஸ்வினுக்கு மாமல்லபுரம் பகுதியில் கடை வைப்பதற்கான இடத்தை ஒதுக்கீடு செய்து தரவும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதன்படி அதிகாரிகளுக்கு அவர் வியாபாரம் செய்வதற்கான இடத்தை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தனர்.
இந்நிலையில், முதல்வர் மற்றும் அதிகாரிகளின் பெயரைக் கூறி சக வியாபாரிகளை மிரட்டியதாகவும், பிறர் கடைகளுக்கு முன்பு அஸ்வினி கடை விரித்து இடையூறு ஏற்படுத்துவதாகவும் சக வியாபாரிகள் குற்றம்சாட்டி வந்தனர்.
திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்த சக நரிக்குறவ இனப் பெண்ணான நதியா என்பவர் புதன்கிழமை மாமல்லபுரத்தில் சாலையில் கடை வைத்து பாசி, மணி வியாபாரம் செய்துள்ளார். அப்போது அங்குவந்த அஸ்வினி நதியாவை மிரட்டியுள்ளாராம். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். அப்போது அஸ்வினி தான் வைத்திருந்த கத்தியால், நதியாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், நதியாவின் வயிறு, கழுத்து மற்றும் முதுகுப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அஸ்வினுக்கு எதிராக, நதியா மாமல்லபுரம் காவல் நிலையத்தில் நதியா புகார் அளித்தார்.
இந்தப் புகாரின்பேரில்,அஸ்வினி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்தனர். ஏற்கெனவே, கடந்த மாதம் சக வியாபாரியை மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸார் அஸ்வினியை எச்சரித்து அனுப்பியிருந்த நிலையில், சக இனப் பெண்ணை கத்தியால் தாக்கிய வழக்கில் அஸ்வினி தற்போது கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.