மகளை காதலித்த இளைஞர் கொலை - தந்தை, மகன், மகள் உட்பட 8 பேர் கைது

கொல்லப்பட்ட சக்திவேல், பாலகுரு, தேவிகா
கொல்லப்பட்ட சக்திவேல், பாலகுரு, தேவிகா
Updated on
1 min read

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மகளை காதலித்த இளைஞரை, தோப்புக்கு வரவழைத்து கூலிப்படை மூலம் கொலை செய்து, உடலை ஆற்றில் வீசிய தந்தை, மகன், மகள் உட்பட 8 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரம் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் கர்ணன். இவரது இளைய மகன் சக்திவேல்(23). தனியார் பால் நிறுவனத்தில் வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இதனிடையே, கடந்த 6-ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற சக்திவேல் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது அண்ணன் சரவணன் அளித்த புகாரின் பேரில் வல்லம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், அம்மாபேட்டை அருகே ராராமுத்திரக்கோட்டை பகுதியில் உள்ள நெய்வாசல் வாய்க்காலில், கடந்த 8-ம் தேதி சக்திவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அம்மாபேட்டை போலீஸார் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வல்லம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

விசாரணையில் தெரியவந்ததாவது: சக்திவேலும், அய்யாசாமிப்பட்டியைச் சேர்ந்த பாலகுருவின்(48) மகள் தேவிகாவும்(20) காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும், காதலுக்கு பாலகுரு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும் அவர்கள் காதலித்து வந்ததால், சக்திவேலுவை கொலை செய்ய பாலகுரு திட்டமிட்டார்.

இதுகுறித்து செங்கிப்பட்டியைச் சேர்ந்த பாஸ்கர் மகன் சத்யாவை(34), பாலகுரு அணுகி உள்ளார். இதைத்தொடர்ந்து, பாலகுரு மற்றும் சத்யா ஆகியோர் மதுரையில் இருந்து கூலிப்படையினரை அணுகினர்.

இதையடுத்து, தனது நிலத்தை விற்பது தொடர்பாக பேச வேண்டும் எனக் கூறி, சக்திவேலுவை திருமலை சமுத்திரம் பகுதியில் உள்ள தனது தென்னந்தோப்புக்கு கடந்த 6-ம்தேதி பாலகுரு வரவழைத்துள்ளார். அப்போது அங்கிருந்த மதுரையைச் சேர்ந்த கூலிப் படையினர் 3 பேர், சக்திவேலுவை வெட்டிக்கொலை செய்துள்ளனர். இதற்கு பாலகுருவின் மகன் துரைமுருகன்(19), மகள் தேவிகா(20), பாலகுருவிடம் வேலை பார்க்கும் அய்யாச்சாமிபட்டி கதிர்வேல்(35) ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

பின்னர், சக்திவேலுவின் உடலையும், அவர் வந்த வாகனத்தையும், வேறொரு வாகனத்தில் ஏற்றிச் சென்று குருவாடிப்பட்டி பகுதியில் கல்லணைக் கால்வாய் ஆற்றில் வீசியுள்ளனர்.

இதனிடையே, மதுரையைச் சேர்ந்த கூலிப் படையினர் பாலகுருவிடம் பணத்தை வாங்குவதற்காக நேற்று வந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று கூலிப்படையைச் சேர்ந்த கிரிவாசன்(45), சந்தோஷ்குமார் ராஜா(44), கார்த்தி(35) ஆகியோரை மடக்கிப் பிடித்தனர். மேலும், பாலகுரு, அவரது மகள் தேவிகா, மகன் துரைமுருகன் மற்றும் சத்யா, கதிர்வேல், கிரிவாசன், சந்தோஷ்குமார் ராஜா, கார்த்தி ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in