

சென்னை: கடந்த 2012-ம் ஆண்டு சென்னை ஐசிஎப் காவல் நிலையம் அருகே உறவுக்கார பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த நபரிடம், தன்னை போலீஸ்காரர் என அறிமுகப்படுத்திக் கொண்ட நித்தியராஜ் என்ற இளைஞர், அந்த நபரிடமிருந்து மொபைல் போனை பறிக்க முயன்றுள்ளார். அவ்வழியே சென்ற ஐசிஎப் காவல் நிலைய ஓட்டுநர் நடராஜன் மற்றும் போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த சுனில்குமார் ஆகியோர் நித்தியராஜை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்துள்ளனர்.
பின்னர் நித்தியராஜை கடுமையாக தாக்கியதாக அப்போது அங்கு ஆய்வாளராக பணியாற்றிய ராமலிங்கம் மற்றும் போலீஸ்காரர்கள் ஆனந்த் வினோத்சிங், விஜயகுமார் ஆகியோர் மீதுபுகார் எழுந்தது. இதனிடையே, புழல் சிறையில் அடைக்கப்பட்ட நித்தியராஜ் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் உள்ளிட்டோருக்கு எதிராக அரசு சிறப்புவழக்கறிஞர் சுதாகர், 650 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்.
அதில், காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட நித்தியராஜின் கை, கால்களை கட்டி தொங்கவிட்டு பிளாஸ்டிக் பைப் மற்றும் லத்தியால் கொடூரமாக தாக்கியதால் நித்தியராஜ் உயிரிழந்துள்ளதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.