

சென்னை: ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்த இரண்டு விரைவு ரயில்களில் பயணித்தவர்களிடம் மர்ம கும்பல் நகைகளைப் பறித்துச் சென்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஐதராபாத் - சென்னை இடையிலான விரைவு ரயில் நேற்று முன்தினம் மாலை ஐதராபாத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ரயில் நேற்று அதிகாலை 1.20 மணிக்கு ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சிங்கராய கொண்டா மற்றும் காவாலி ரயில் நிலையம் இடையே சென்று கொண்டிருந்தது.
அதிகாலை நேரம் என்பதால், பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். தெட்டு ரயில் நிலையம் அருகே சிக்னல் கிடைக் காததால், ரயில் ஓட்டுநர் நடுவழியில் ரயிலை நிறுத்தினார். அப்போது, 6 பேர் கொண்ட கும்பல் ரயில் பயணிகளிடம் தங்கச் சங்கிலிகளைப் பறித்தது.
ஒரேநேரத்தில் எஸ்.2, எஸ்-4, எஸ்-5, எஸ்-6, எஸ்-7 மற்றும் எஸ்-8 ஆகிய பெட்டி களில் ஜன்னலோரம் பயணித்த பயணிகளிடம் தங்கச் சங்கிலியைப் பறித்தனர். மேலும், ரயில் பெட்டிகளின் உள்ளே சென்று, சில பயணிகளிடம் நகைகளைப் பறித்தனர். இதனால் அதிர்ச்சி யடைந்த பயணிகள் கூச்ச லிட்டதுடன், கொள்ளையர் களைப் பிடிக்க முயன்றனர். அப்போது, பயணிகள் மீது கொள்ளைக் கும்பல் கற்களை வீசிவிட்டு, அங்கிருந்து தப்பியோடியது.
இதற்கிடையில், அந்த வழியாக ஐதராபாத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சார்மினார் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. தெட்டு- காவாலி இடையே நேற்று அதிகாலை 3.42 மணிக்கு வந்தபோது, சிக்னலுக்காக நடுவழியில் நின்றது. அப்போது, இந்த ரயிலின் எஸ்-1, எஸ்-2 பெட்டிகளில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகளிடம், அதே கொள்ளைக் கும்பல் நகைகளைப் பறித்துச் சென்றது. இதுகுறித்து ஓங்கோல் ரயில் நிலையத்தில் பயணிகள் புகார் கொடுத்தனர்.
மேலும், தங்கச் சங்கிலி யைப் பறி கொடுத்த இரண்டு பயணிகள், சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீஸில் புகார் கொடுத்தனர். ஐதராபாத்தைச் சேர்ந்த மூர்த்தி என்வரது மனைவி உமா ஜானகி(56) கொடுத்த புகாரில், 25 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றதாகவும், ஐதரா பாத்தைச் சேர்ந்த மகேந்திர சவுத்திரியின் மனைவி நீத்து சவுத்திரி(25) கொடுத்த புகாரில், 36 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றதாகவும் தெரிவித் துள்ளனர்.
இதுகுறித்து சென்ட்ரல் ரயில் நிலைய காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து, காவாலி ரயில் நிலைய போலீஸாருக்குத் தகவல் அனுப்பினார். மொத்தம் 30 பவுன் நகைகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ரயில்வே போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.