

சென்னை: நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை மற்றும் ஹாடோஸ் சாலை சந்திப்பில் போலீஸார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது மது போதையுடன் பைக் ஓட்டிவந்த அருண் (36) என்பவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, பைக்கை பறிமுதல் செய்து நுங்கம்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தியிருந்தனர்.
பின்னர் போலீஸார் நடமாட்டம்இல்லாத நேரத்தில் காவல் நிலையத்துக்கு வந்த அருண் மற்றொரு சாவியை போட்டு, பைக்கைஎடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். காலை மீண்டும் காவல் நிலையம் வந்த போலீஸார் பறிமுதல் செய்து வைத்திருந்த பைக் காணாததை கண்டு திடுக்கிட்டனர்.
பின்னர், அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, வாகனத்தை அருண் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவர் மீது திருட்டு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்ததோடு, வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.