

திருவாரூர்: திருவாரூர் அருகே பட்டியலின மக்கள் கோயிலில் வழிபாடு நடத்த எதிர்ப்பு தெரிவித்த விவகாரத்தில், சாலை மறியலில் ஈடுபட்ட 35 பேர் மீது குடவாசல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், அரசவனங்காடு என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள மகா சக்தி மாரியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் ஆடி மாத திருவிழா நடைபெற்றது. இதில், அந்த ஊரில் வசிக்கும் பட்டியலின மக்கள் பங்கேற்கக் கூடாது என மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பட்டியலின மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் எம்.எல்.ஏ பூண்டி கே.கலைவாணன், கோட்டாட்சியர் சங்கீதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, திருவிழாவை நிறுத்திய கோட்டாட்சியர் சங்கீதா, அந்தக் கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் என அறிவித்தார்.
இந்நிலையில், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், காவல்துறை அனுமதி பெறாமலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, பட்டியலின மக்கள் 35 பேர் மீது குடவாசல் காவல் நிலையத்தில் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.