Published : 12 Aug 2023 06:33 AM
Last Updated : 12 Aug 2023 06:33 AM

பொத்தேரி அருகே இருசக்கர வாகனங்கள் மீது டிப்பர் லாரி மோதியதில் 4 பேர் உயிரிழப்பு

விபத்து நடந்த சாலையில் சிதறிக் கிடந்த பைக்கின் பாகங்கள். (அடுத்த படம்) விபத்தில் சேதமடைந்த கனரக வாகனம். படங்கள்: எம்.முத்துகணேஷ்

மறைமலை நகர்: மறைமலை நகரை அடுத்த பொத்தேரியில் இருசக்கர வாகனங்கள் மீது டிப்பர் லாரி மோதியதில் அதே இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார்.

பொத்தேரியில் நேற்று காலை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்காக சென்டர் மீடியன் பகுதியில் 3 இருசக்கர வாகனங்கள் நின்றிருந்தன. அப்போது செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர்லாரி ஒன்று இந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. பின்னர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி நின்றது.

இதில், இருசக்கர வாகனத்துடன் இருந்த கல்லூரி மாணவர் ராணிப்பேட்டையைச் சேர்ந்த கார்த்தி (23). சோளிங்கரைச் சேர்ந்த ஜஸ்வந்த் (22), கண்டிகையைச் சேர்ந்த சைமன், அருகே நின்றிருந்த பொத்தேரி கோனாதி கிராமத்தைச் சேர்ந்த பவானி (35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி படுகாயமடைந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல்அறிந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலானாய்வு பிரிவு போலீஸார், சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று உடல்களை மீட்டு பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், காயமடைந்தவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுகின்றனர்.

இதையடுத்து, விபத்தில் சிக்கிய லாரி மற்றும் வாகனங்களை கிரேன் உதவியுடன் அகற்றினர். இதையடுத்து சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது. விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் திருக்கழுகுன்றத்தை அடுத்த பாண்டூரைச் சேர்ந்தராஜேந்திரனை பொதுமக்கள் மடக்கிபிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத், எம்எல்ஏ கருணாநிதி, தாம்பரம் துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே சாலை விபத்தை தடுக்க உரிய தடுப்பு பணிகளை மேற்கொள்ளக்கோரி விபத்து நடந்த தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். மறைமலை நகர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அவர்களது உடலுக்கு
அமைச்சர் தா .மோ .அன்பரசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
உடன் ஆட்சியர் ராகுல்நாத் , இ.கருணாநிதி எம்எல்ஏ, தாம்பரம் துணை
ஆணைய ர் பவன்குமார் ரெட்டி, உதவி ஆணையர் சீனிவாசன் உள்ளிட்டோர்.

தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: இந்நிலையில் விபத்து செய்தி அறிந்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பு: துயரமான செய்தி கேட்டு மிகுந்த வேதனைஅடைந்தேன். காயமடைந்த பார்த்தசாரதிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2லட்சமும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருபவருக்கு ரூ.50 ஆயிரமும் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x