

திருவள்ளூர்: சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் சேஷாராம். நகை வியாபாரி. இவர் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கடைகளுக்கு நகைகள் விற்பனை செய்து வந்தார். வழக்கம் போல் நேற்று முன்தினம் திருவள்ளூர் வந்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் ஒரு கிலோ நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கத்துடன் சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
தொழுவூர் அருகே வந்தபோது 4 மோட்டார் சைக்கிள்களில் வழிமறித்த 8 பேர் கும்பல் அவரை கத்தியால் வெட்டிவிட்டு நகை, பணம், இருசக்கர வாகனத்தையும் பறித்துவிட்டு தப்பியது. பலத்த காயமடைந்த சேஷாராம் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் செவ்வாப்பேட்டை போலீஸார் கொள்ளை கும்பலை தேடினர். அப்போது, வெள்ளக்குளம் அருகே ரோந்து வந்த போலீஸார் விசாரித்து அவர்கள் திருடி வந்த நகை, பணத்தை மீட்டனர். அவர்களை பிடிக்க முயன்றபோது பைக்குகளில் தப்பினர். இதையடுத்து சுமார் ஒரு கிமீ தூரம் வரை துரத்திச் சென்று வழிப்பறி கும்பலைச் சேந்த திருவள்ளூர் ஒதிக்காடு ஆதித்யா, சரவணன், எழிலரசன் ஆகியோர் என 3 பேரை மடக்கிப் பிடித்தனர். தப்பியோடிய மற்ற 5 பேரையும் தேடி வருகின்றனர்.