சேலத்தில் 577 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் அழிப்பு

சேலத்தில் 577 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் அழிப்பு
Updated on
1 min read

மேட்டூர்: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மருத்துவக் கழிவுகளை அழிக்கும் கிடங்களில், மேற்கு மண்டலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 577 கிலோ கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டன.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுக்கும் வகையில் காவல் துறையினர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, வெளி மாநிலங்களில் இருந்து போதைப் பொருட்கள் வருவதை தடுக்கும் வகையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, கடத்தல்காரர்களை பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு மண்டல காவல் எல்லைக்குட்பட்ட சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் சேலம், திருப்பூர், கோவை மாநகர காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாக போதைப் பொருள் கடத்தல் மற்றும் தடுப்பு சோதனையில் 577 கிலோ 886 கிராம் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனை, சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் அடுத்த கோணமேரி பகுதியில் உள்ள மருத்துவ கழிவுகளை அழிக்கும் கிடங்கிற்கு இன்று கொண்டு வரப்பட்டு, அழிக்கப்பட்டன. மேற்கு மண்டல ஐ,ஜி பவானி ஈஸ்வரி தலைமையில், சேலம் டிஐஜி ராஜேஸ்வரி, சேலம் எஸ்பி சிவக்குமார், தடவியல் ஆய்வாளர் பார்த்தசாரதி ஆகியோர், ஏடிஎஸ்பிகள் சவுந்தராஜன், ராஜன், சுரேஷ் உள்ளிட்டோர் முன்னிலையில் கஞ்சா, குட்கா மூட்டைகள் இயந்திரங்களில் போடப்பட்டு எரிக்கப்பட்டது.

முன்னதாக, போதை பொருட்களால் ஏற்படுத் தீமைகள் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in