

மதுரை: மதுரை மாநகர மாவட்ட பாஜக தலைவரின் மாமனார் கொலை வழக்கில் 8 ஆண்டுக்கு பிறகு திருச்சியை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
மதுரை திருமோகூர் அருகிலுள்ள ராஜ கம்பீரம் பகுதியைச் சேர்ந்தவர் கல்லாணை (60). இவர் நான்கு வழிச்சாலையிலுள்ள வராகி அம்மன் கோயிலில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2015ம் ஆண்டு, இரவு பணியில் இருந்த இவர், கோயில் அருகே சடலமாக கிடந்துள்ளார். மேலும், கோயிலில் இருந்த உண்டியல், பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக ஒத்தக்கடை போலீஸார் வழக்கு பதிவு செய்து, சம்பவம் இடத்தில் இருந்து கை ரேகைகளை சேகரித்து விசாரித்து வந்தனர். இதனிடையே, திண்டுக்கல் நகர் காவல் நிலைய எல்லையில் கடந்த 2016ம் ஆண்டில் திருட்டு வழக்கு ஒன்றில் சிக்கி தண்டனை பெற்று, மதுரை சிறையில் இருக்கும் திருச்சி திருவெறும்பூர் அருகிலுள்ள வடக்கு காட்டூரைச் சேர்ந்த அமரேசன் மகன் நிர்மல் (30) என்பவரின் ரேகையோடு கொலை, கொள்ளை வழக்கில் பதிவான ரேகைகள் ஒத்துபோவது தெரிந்தது.
இதைத் தொடர்ந்து, நிர்மலை ஒத்தக்கடை போலீ ஸார் 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில், திருச்சியில் இருந்து மதுரைக்கு வந்த போது, செலவிற்கு பணமின்றி வராகி அம்மன் கோயில் உண்டியலை உடைக்க முயன்றதும், தடுக்க வந்த கல்லாணையை கட்டையால் தாக்கியதில் அவர் உயிரிழந்ததையும் போலீஸாரிடம் ஒப்புக் கொண்டார்.
இதனையடுத்து, கொலை, கொள்ளை வழக்கில், 8 ஆண்டுக்கு பிறகு நிர்மல் கைது செய்யப்பட்டார். இதற்கான ஆவணங்கள் சிறை நிர்வாகத்திடம் போலீஸார் ஒப்படைத்தனர். இதனிடையே கொலை செய்யப்பட்ட கல்லாணை மதுரை மாநகர பாஜக தலைவர் மகா.சுசீந்திரன் மாமனார் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.