Published : 10 Aug 2023 04:03 AM
Last Updated : 10 Aug 2023 04:03 AM

தருமபுரியில் யூ டியூபர் கடத்தல் - மற்றொரு யூடியூபர் உட்பட 12 பேர் கைது

தருமபுரி: தருமபுரியில் யூ-டியூப் சேனல் நடத்துவது தொடர்பான பிரச்சினையில் இளைஞரைக் கடத்திய 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் தம்மனம்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் (31). இவர் தருமபுரி நகரில் அலுவலகம் அமைத்து யூ - டியூப் சானல் நடத்தி வருகிறார். நேற்று காலை இவரது அலுவலகத்துக்கு வந்த 12 பேர் அடங்கிய கும்பல், தங்களின் யூ - டியூப் சேனலின் பார்வையாளர்களை ஆனந்த குமார் போலியாக அதிகப்படுத்தியதாகக் கூறி தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர்.

பின்னர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரை காரில் கடத்திச் சென்றுள்ளனர். மேலும், ஆனந்தகுமாரின் அலுவலகத்தில் இருந்த 70 செல்போன், 5 மடிக் கணினிகளையும் அவர்கள் தூக்கிச் சென்றுள்ளனர். ஆனந்த குமாரின் அலுவலகத்தில் பணியாற்றும் பிரேம் குமார் என்பவர் இந்த தகவலை தருமபுரி நகர காவல் நிலையத்துக்கு தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின் பேரில் தருமபுரி டிஎஸ்பி செந்தில் குமார் வழிகாட்டுதலில் தருமபுரி நகரக் காவல் நிலைய ஆய்வாளர் ரங்கசாமி தலைமையிலான போலீஸார் ஆனந்தகுமாரை தேடி வந்தனர். இந்நிலையில், கடத்தலில் ஈடுபட்டவர்கள் தருமபுரி அடுத்த குண்டலப்பட்டியில் இருப்பது தெரிய வந்தது.

எனவே, அவர்களைப் பிடித்து விசாரித்த போது, பழைய தருமபுரி பகுதியைச் சேர்ந்த சின்னசாமி (38) என்பவர் யூ - டியூப் சேனல் நடத்தி வருவதாகவும், மற்றொரு யூ - டியூபரான ஆனந்தகுமார் பதிவிட்ட சில தவறான புள்ளி விவரங்களால் சின்னசாமியின் யூ - டியூப் சேனலின் வருவாய் பாதிப்படைந்த ஆத்திரத்தில் ஆனந்த குமாரை கடத்திச் சென்றதாகவும் தெரியவந்தது.

எனவே, கடத்தலில் ஈடுபட்ட சின்னசாமி (38), அதகப்பாடி சீராளன் (30), கோடியூர் சுந்தரம் (30), சுரேஷ் (39), ரவி (39), ஏ.ஜெட்டி அள்ளி முருகன் (26), ராமு (30), மல்லிக்குட்டை சதீஷ் (35), பெரியசாமி (27), கிருஷ்ணாபுரம் சந்திரன் (29), தருமபுரி தினேஷ் குமார் (23), சோளப்பாடி மணி (25) ஆகிய 12 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், 6 இருசக்கர வாகனங்கள், ஆனந்த குமாரின் அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட 70 செல்போன்கள், 5 மடிக்கணினிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். யூ டியூப் சேனலின் வருவாய் பாதிப்படைந்ததால் கடத்தியது விசாரணையில் தெரியவந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x