ஹைதராபாத் | சாலையில் இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி துன்புறுத்திய இளைஞர் கைது

கைது செய்யப்பட்ட இளைஞர், அருகே ப்ளாஸ்டிக் ஷீட்டுக்குள் தஞ்சம் புகுந்த பாதிக்கப்பட்ட பெண்
கைது செய்யப்பட்ட இளைஞர், அருகே ப்ளாஸ்டிக் ஷீட்டுக்குள் தஞ்சம் புகுந்த பாதிக்கப்பட்ட பெண்
Updated on
1 min read

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணுக்கு பாலியல் சீண்டல் கொடுத்த இளைஞர் அதை எதிர்த்த அப்பெண்ணின் ஆடையை கிழித்து அவரை நிர்வாணப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் ஜவஹர் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. அருகிலிருந்த கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடந்தது என்ன? ஞாயிறு இரவு 8 மணி அளவில் இளம் பெண் ஒருவர் ஒரு துணிக்கடையில் இருந்து வெளியே வருகிறார். அப்போது ஓர் இளைஞர் அந்தப் பெண்ணைத் தவறாகத் தொடுகிறார். அதற்கு அப்பெண் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிடுகிறார். உடனே அந்த நபர் ஆவேசமாக அப்பெண்ணின் ஆடைகளைக் கிழிக்கிறார். விநாடிகளில் அப்பெண் நிர்வாணமாக்கப்படுகிறார். அந்த வழியாக வந்த பெண் ஒருவர் இதனை தடுக்க முயற்சி செய்ய அந்த நபர் அவரையும் தாக்கத் தொடங்குகிறார். அதற்குள் போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டு போலீஸார் வந்து அந்த நபரை கைது செய்தனர். நிர்வாணமாக இருந்த பெண்ணுக்கு அருகிலிருந்த கடையிலிருந்த ப்ளாஸ்டிக் ஷீட்டை போர்த்தி பெண்கள் பாதுகாத்தனர்.

அந்த நபர் மீது சட்டப் பிரிவுகள் 354 (b), 323, 506 r/w 34 ஆகியனவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்த போது அந்த இளைஞரின் அருகில் அவருடைய தாயும் இருந்துள்ளார். ஆனால் அவர் தனது மகனின் செய்கையைத் தடுக்க முற்படவில்லை என்பதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சமூக வலைதளங்களில் பெண்கள் பலரும் தங்களின் வேதனையை வெளிப்படுத்தியதோடு நாட்டில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

சம்பவம் நடந்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஊடகப் பேட்டியில், "இப்போதுதான் மணிப்பூர் சம்பவம் வெளியாகியது. அதற்குள் இன்னொரு பெண் சாலையில் நிர்வாணப்படுத்தப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் எங்களின் நம்பிக்கையை நொறுக்குகிறது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in