

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே விளை நிலத்தில் யானைகள் நுழைந்தால் கொன்றுவிடுவோம் என வனத்துறையினரிடம் மிரட்டல் விடுத்த 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஒகேனக்கல் வனச் சரகத்தையொட்டியுள்ள பேவனூர் பீட் பூதிப்பட்டி காந்தி நகர் காப்புக்காடு பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, வனக் காப்பாளர் ரகுராமன்(35) தலைமையிலான வனத்துறையினர் பூதிப்பட்டி பகுதியில் கண்காணிப்புப் பணி மேற்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த, பூதிப்பட்டியைச் சேர்ந்த அல்லிமுத்து(50), ராமச்சந்திரன்(45) மற்றும் 6 பேர் அடங்கிய குழுவினர் வனக் காப்பாளர்கள் ரகுராமன், பிரித்விராஜ், ராமலிங்கம், வேட்டை தடுப்புக் காவலர்கள் அய்யண்ணன், ராஜபதி, செல்வம் ஆகியோர் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தி அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், ‘விளைநிலங்களுக்குள் யானைகள் நுழைந்தால் மின்சாரம் பாய்ச்சி அல்லது துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுவோம். எனவே, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் விளைநிலங்களில் நுழையாதபடி தடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறி மிரட்டியுள்ளனர்.
இது தொடர்பாக வனக் காப்பாளர் ரகுராமன் ஒகேனக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து அல்லிமுத்து, ராமச்சந்திரன் உள்ளிட்ட 8 பேர் மீது ஒகேனக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.