

சென்னை: சென்னையில் 2 ஆண்டுகளாக பூட்டியிருந்த வீடுகளை குறி வைத்து அடுத்தடுத்து திருட்டில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மடிப்பாக்கம், ராம்நகர் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். பின்னர், வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 60 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன. இதுகுறித்து மடிப்பாக்கம் போலீஸார் விசாரித்து வந்தனர்.
இந்த திருட்டில் ஈடுபட்டது சென்னை ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்தசதீஷ் என்ற கிளி சதீஷ் (27)என்பது தெரியவந்தது. இதையடுத்து மடிப்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த அவரைதனிப்படை போலீஸார் நேற்றுகைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ``கைது செய்யப்பட்டசதீஷ் கடந்த 2 ஆண்டுகளாக மடிப்பாக்கம், பழவந்தாங்கல், பல்லாவரம், பீர்க்கன்கரணை, அம்பத்தூர், திருமுல்லைவாயல், அசோக்நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டுள்ளார். பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டம்விட்டு திருட்டில் ஈடுபட்டுள்ளார். அவரிடமிருந்து 80 பவுன்தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.40 லட்சமாகும் என்றனர்.