

திருவள்ளூர்: திருவள்ளூரில் பசியால் அழுத 2 மாத பெண் குழந்தையை தரையில் வீசி கொலை செய்தது தொடர்பாக தந்தை கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம்- அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(25). இவரது மனைவி அஞ்சலி (24). இத்தம்பதிக்கு, கங்கோத்ரி என்ற 2 மாத குழந்தை உட்பட 3 பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை என 4 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், சுரேஷ் தனது குடும்பத்துடன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தங்கி வந்தார். இச்சூழலில், சுரேஷும், அவரது மனைவி அஞ்சலியும் குப்பையை சேகரித்து, பழைய இரும்பு கடையில் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன் - மனைவி இருவரும் குழந்தைகளுடன் உணவருந்திவிட்டு, உறங்கிக் கொண்டிருந்தனர். இச்சூழலில், நேற்று அதிகாலை 1.45 மணியளவில், 2 மாத பெண் குழந்தையான கங்கோத்ரி, பசியால் அழுதுக் கொண்டிருந்தது.
இதனால், மதுபோதையில் இருந்த சுரேஷ், உறங்கி கொண்டிருந்த மனைவியை எழுப்பி, பால் கொடுக்க கூறியதாக தெரிகிறது. அப்போது, கணவன் - மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், மிகுந்த கோபமடைந்த சுரேஷ், 2 மாத பெண் குழந்தை கங்கோத்ரியை தூக்கி தரையில் வீசினார்.
இதில் பலத்த காயமடைந்த குழந்தையை அஞ்சலி மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு, தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தை, நேற்று அதிகாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இதுகுறித்து, திருவள்ளூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையின் அடிப்படையில், சுரேஷை கைது செய்தனர்.