

சென்னை: வேளச்சேரியைச் சேர்ந்தவர் லட்சுமி. சின்னத்திரை டப்பிங் கலைஞரான இவர் வீட்டில், கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வீட்டு வேலைகளை செய்ய சேர்ந்தார். வேலைக்கு சேர்ந்த சில நாட்களில் அந்த பெண், லட்சுமியை தாக்கி மயக்கமடைய செய்து, பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகைகள், ரூ.40,000 ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினார்.
இது குறித்து வேளச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். ஆனால் அந்த வழக்கில் துப்பு துலக்க முடியாததால், கிடப்பில் போடப்பட்டது. அண்மையில் திருட்டில்ஈடுபட்ட பெண்ணின் கைரேகையை, தமிழகத்தில் நடந்த வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களின் கைரேகையோடு ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.
இதில் லட்சுமி வீட்டில் திருட்டில் ஈடுபட்டது திருச்சி லால்குடி அருகே உள்ள ஆலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த காந்தி (64) என்ற பெண் என்பதும், அவர் திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குள் நடந்த ஓர் ஆதாய கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த காந்தியை போலீஸார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.