

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் எச்சூர் ஊராட்சியை சேர்ந்தவர் ஆல்பர்ட் (30). திமுக இளைஞரணி அணி பொறுப்பாளராக இருந்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் ஸ்கிராப் எடுப்பது, டிரான்ஸ்போர்ட் மற்றும் கட்டுமான தொழில் செய்து வந்தார். மேலும், இவர் மீது சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட காவல் நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காரில் தனது ஆதரவாளர்களுடன் எச்சூர் பகுதியில் சென்றபோது 4 இருசக்கர வாகனத்தில் வந்த 8 பேர் மர்ம கும்பல் ஆல்பர்ட் அமர்ந்திருந்த இடத்தில் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாகவும் இதனால் ஆல்பர்ட் தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஆல்பர்ட்டை துரத்தி சென்ற கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளது. இதை தடுக்க முயன்ற அவரது ஆதரவாளர்களுக்கும் வெட்டு விழந்தது.
தகவலறிந்து வந்த போலீஸார், ஆல்பர்ட்டை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கும் பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இக்கொலை சம்பவம் தொடர்பாக சுங்குவார்சத்திரம் போலீஸார் வழக்கு பதிந்தனர். மேலும், மாவட்ட எஸ்பி சுதாகர் தலைமையில் தனிப்படை அமைத்து சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக 8-க்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து போலீஸார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.