

சென்னை: கோயிலில் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுக உறுப்பினரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ராமாபுரம் திருவள்ளுவர் சாலையில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு கோயிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது திருவிழாவைக் காண வந்த ஒருவர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 22 வயதான பெண் காவலரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் காவலர், உடனே அங்கிருந்த உதவி ஆய்வாளர் கோபாலிடம் இது குறித்து தெரிவித்தார். இதையடுத்து, போலீஸார் அந்த நபரைப் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் ராமாபுரம் பஜனைக் கோயில் தெருவைச் சேர்ந்த திமுக உறுப்பினரான கண்ணன் (51) என்பதும், இவர் அதே பகுதியில் கார் மெக்கானிக்காக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரைக் கைது செய்தனர். அப்போது, திமுக நிர்வாகிகள் கண்ணனை கைது செய்யக் கூடாது என போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
மீண்டும் ஒரு சம்பவம்: ஏற்கெனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சென்னை விருகம்பாக்கத்தில் திமுக எம்.பி கனிமொழி தலைமையில் நடைபெற்ற அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டத்தில், பாதுகாப்புப் பணிக்கு வந்த பெண் காவலரிடம் திமுக இளைஞரணி நிர்வாகிகள் 2 பேர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது, மீண்டும் திமுக உறுப்பினர் ஒருவர் அதேபோல், ஒரு பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.