பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற எஸ்.எஸ்.ஐ. மீது வழக்கு @ ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமா பட்டியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.) மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி இம்மானுவேல் கீழத்தெருவைச் சேர்ந்தவர் சப்பாணி (55). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 3-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு அப்பகுதியில் திறந்து கிடந்த ஒரு வீட்டுக்குள் புகுந்து, தூங்கிக் கொண் டிருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார்.
அப்போது,அந்த பெண் அதிர்ச்சி அடைந்து சத்தமிட்டார். இதை அந்த பெண்ணின் கணவர் தட்டிக் கேட்டார். இதையடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது சப்பாணி, தான் போலீஸ் என்றும், தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது எனவும் கூறி அவர்களுக்கு மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கூமாபட்டி போலீஸார் பாலியல் துன்புறுத்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் சிறப்பு சார்பு ஆய்வாளர் சப்பாணி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
