

சென்னை: துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் இருவர் ராஜஸ்தானில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு தணிகாசலம் நகர் ஸ்ரீராமன் சாலை வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் கவிதா(36). இவர், கடந்த மாதம் 14-ம் தேதி மதியம் தனது வீட்டின் அருகில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 கொள்ளையர்கள் கவிதாஅணிந்திருந்த 8 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினர்.
அதிர்ச்சியடைந்த கவிதா, இதுகுறித்து மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, நகை பறிப்பில் ஈடுபட்டது ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திர குமார்(28) என்பது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த 21-ம் தேதி அவரை சென்னையில் கைது செய்தனர்.
மேலும், அவரது கூட்டாளிகளான ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் (25), ரமேஷ் பஞ்சாரா (27) ஆகியோர் ராஜஸ்தானில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, தனிப்படை போலீஸார் ராஜஸ்தான் சென்று, அங்கு தலைமறைவாக இருந்த தினேஷ் குமார், ரமேஷ் பஞ்சாரா ஆகியோரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “ஏற்கெனவே கைது செய்யப்பட்ட மகேந்திர குமார் 10 ஆண்டுகளாக சென்னையில் தங்கி, கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனது சொந்த ஊரைச் சேர்ந்த இருவருடன் சேர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளார். விமானம் மூலம் சென்னை வந்து நகை பறிப்பில் ஈடுபட்டுவிட்டு, பின்னர் ரயில் மூலம் சொந்த மாநிலம் தப்பிச் செல்வதை இவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். அவர்களை துப்பாக்கி முனையில் கைது செய்தோம்” என்றனர்.
இதற்கிடையில் கைது செய்யப்பட்ட இருவரும் சென்னை அழைத்து வரப்பட்டு, நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போலீஸார் முடிவு செய்துள்ளனர்.