

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலாவூரணி பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ்(42). இவர் விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக அரசு தொடர்பு பிரிவு செய லாளராக உள்ளார்.
இவர் ஆமத்துாரில் உள்ள 5 ஏக்கர் நிலத்தை விற்பதாகக் கூறி, ரூ. 51 லட்சம் மோசடி செய்ததாக ஜவுளிக்கடை உரிமையாளர் ஈஸ்வரன்(40) புகார் அளித்தார்.
திருத்தங்கல் போலீஸார் வழக்கு பதிந்து கடந்த மாதம் சத்யராஜை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற சத்யராஜ் கடந்த வாரம் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் திருத்தங்கல் காவல் நிலையம் வந்த சத்யராஜ், தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டு காவல் நிலையம் நோக்கி ஓடினார். போலீஸார், தீயை அணைத்து சத்யராஜை மீட்டனர். சத்யராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.