

ஆவடி: சென்னை, அம்பத்தூர் அருகே உள்ள கொரட்டூர், சாவடி தெருவில் செயல்படும் சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், அயனாவரம், செட்டி தெருவை சேர்ந்த பழனிவேல் (56) என்ற ஆசிரியர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், ஆசிரியர் பழனிவேல் கடந்த சில நாட்களுக்கு முன்பு 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அம்மாணவி தன் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
இதையடுத்து, மாணவியின் பெற்றோர் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் ஜோதிலட்சுமி தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஆசிரியர் பழனிவேலுவை நேற்று கைது செய்தனர். விசாரணையில், மேலும் சில மாணவிகளுக்கு பழனிவேல் பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.