

காரைக்குடி: கார் பரிசு விழுந்ததாகக் கூறி காரைக்குடி பெண்ணிடம் ஆன்லைன் மூலம் ரூ.12 லட்சம் மோசடி செய்தது குறித்து சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
காரைக்குடி முத்துப் பட்டினத்தைச் சேர்ந்த காளிதாஸ் மனைவி ராஜாத்தி (42). இவரை கடந்த மாதம் வாட்ஸ் - அப் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர், ரூ.12 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு விழுந்துள்ளதாகக் கூறினார். மேலும் காரின் புகைப் படத்தையும் அனுப்பி வைத்தார். சில நாட்களுக்கு பின்னர், காரை அனுப்பி வைக்கவா அல்லது அதற்குரிய பணம் அனுப்பி வைக்கவா என்று கேட்டார்.
இதற்கு ராஜாத்தி பணமாகத் தருமாறு கேட்டார். நாங்கள் பணத்துடன் வெளிநாட்டில் இருந்து 5 பேர் வர உள்ளதால் விமானக் கட்டணம், வரி உள்ளிட்டவைக்கு பணம் அனுப்பி வைக்குமாறு அந்த நபர் கூறினார். இதை நம்பிய ராஜாத்தி பல தவணைகளாக ரூ.4.97 லட்சம் வரை ஆன்லைன் மூலம் அனுப்பினார். அதன் பின்னர் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜாத்தி, இது குறித்து சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது புதுடெல்லியைச் சேர்ந்த கும்பல் என்பது தெரியவந்தது. கும்பலைப் பிடிக்கும் முயற்சியில் சைபர் கிரைம் போலீஸார் இறங்கி உள்ளனர்.