

திருப்பூர்: திருப்பூரில் வீட்டு உபயோகப் பொருட்கள் கடை உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.16 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே காமாட்சி அம்மன் கோயில் வீதியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹஜ்மத் சிங் (40) என்பவர் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 29-ம் தேதி மாலை வந்த கும்பல், கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 16 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பியது.
ஹஜ்மத் சிங் அளித்த புகாரின் பேரில் தெற்கு போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து, கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலரின் கணவர் சக்திவேல் (30), அழகர் (35) ஆகியோரை சில மணி நேரங்களில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணைக்குப் பின், இவ்வழக்கில் தொடர்புடைய வாசு (30), ஜெய பாண்டியன் (31), முத்து ராமலிங்கம் (40), சிவ மணி (20) ஆகியோரை நேற்று போலீஸார் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம், கார், கத்திகள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். கொள்ளையடித்த பணத்தை கோவா-வுக்கு கொண்டு சென்று பங்கிட்டுக்கொள்ள அவர்கள் திட்டமிட்டிருந்ததும், கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய பின்னர் இரவோடு இரவாக 4 பேரும் உதகைக்கு சென்று மது விருந்து நடத்தி செலவழித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் மேலும் 3 பேருக்கு தொடர் பிருக்கலாம் என போலீஸார் சந்தேகிப்பதால், விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.