

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 3 மாதமாக சம்பளம் தராததால் வடமாநில தொழிலாளி இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக 17 வயது சிறுவன் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அருகே உள்ள புதுச்சத்திரம் பகுதியில் தனியார் செங்கல் சூளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியான ராஜேஷ்(31), செங்கல்சூளை பணிக்கு அழைத்து வந்திருந்ததாக கூறப்படுகிறது.
ஆகவே, ராஜேஷ், செங்கல்சூளை நிர்வாகிகளிடம் மொத்தமாக சம்பளத்தை வாங்கி மற்ற தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுத்து வந்தார். இந்நிலையில் அங்கு பணியாற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலருக்கு கடந்த 3 மாதங்களாக ரூ.20 ஆயிரம் வரை ஊதியம் தராமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம், ராஜேஷிடம் சம்பளம் பாக்கி கேட்டு சத்தீஸ்கர் மாநில தொழிலாளர்கள் தகராறில் ஈடுபட்டனர்.அப்போது, அவர்கள் இரும்பு கம்பியால் ராஜேஷை அடித்ததாக தெரிகிறது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து, தகவல் அறிந்த வெள்ளவேடு போலீஸார் சம்பவ இடம் விரைந்து, ராஜேஷின் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, ராஜேஷ் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார், விசாரணையின் அடிப்படையில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களான சச்சின், நிஷாத் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.