Published : 01 Aug 2023 04:07 AM
Last Updated : 01 Aug 2023 04:07 AM

கிருஷ்ணகிரியில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் - முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பது என்ன?

கிருஷ்ணகிரியில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் தரைமட்டமான கடைகளின் கட்டிட இடிபாடுகள் பொக்லைன் மூலம் அகற்றும் பணி நேற்று நடந்தது.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டையில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக போலீஸார் தீ விபத்து பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது.

கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்த ரவி என்பவரின் பட்டாசு கிடங்கில் கடந்த 29-ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் 6 கடைகள் தரைமட்டமாகின. ரவி உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து பல்வேறு காரணங்கள் கூறப்படும் நிலையில், தருமபுரி தடயவியல் நிபுணர்களின் அறிக்கையில் சமையல் எரிவாயு கசிவே விபத்துக்குக் காரணம் என தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக கடையின் உரிமையாளரின் மகன் அந்தோணி ஆரோக்கிய ராஜ், கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் சுருக்கம்: நான் பழையபேட்டை நேதாஜி சாலையில் எனது குடும்பத் துடன் வசித்து வருகிறேன். காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயிலுக்குச் செல்லும் சாலையில் வாட்டர் கம்பெனி வைத்து தொழில் செய்து வருகிறேன்.

இங்கு எனது தாய் மரியபாக்கியம் என்பவருக்குச் சொந்தமான கடைகள் உள்ளன. அதில் ஒரு கடையில் ரவி என்பவரின் பட்டாசுக் கடையும், ராஜேஸ்வரி என்பவர் ஓட்டலும் நடத்தி வந்தனர். மேலும், 3 கடைகளும் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 29-ம் தேதி காலை நான் வாட்டர் கம்பெனியில் இருந்தபோது பெரிய அளவில் சத்தம் கேட்டது.

வெளியில் சென்று பார்த்தபோது ஓட்டல் கடையின் சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து, நானும், அருகிலிருந்த சிலரும் தொலைவில் நின்று பார்த்தபோது, ஓட்டல் கடை அருகிலிருந்த கடைகள், ஒவ்வொன்றாக இடிந்து விழுந்தன. மேலும் பட்டாசு கடையில் வெடிகள் வெடித்து புகை மண்டலமாக இருந்தது. இந்த விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். சாலையில் நிறுத்தப் பட்டிருந்த இருசக்கர, 4 சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

இது பற்றி விசாரித்தபோது, ராஜேஸ்வரி நடத்தி வந்த ஓட்டலில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பட்டாசுக் கடைக்கு தீ பரவி பட்டாசுகள் வெடித்து, அனைத்து கடைகளும் இடிந்து விழுந்தது தெரிய வந்தது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கிருஷ்ணகிரி நகர போலீஸார், தீ விபத்து பிரி வின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x