மேற்கு வங்கம் | போன் வாங்க 8 மாத குழந்தையை விற்ற பெற்றோர் கைது

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தம்பதியர், ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக தங்களது 8 மாத குழந்தையை விற்றுள்ளனர். இந்தச் சம்பவம் அந்த மாநிலத்தின் வடக்கு 24 பர்கனா மாவட்டத்தில் நடந்துள்ளது.

தம்பதியர் அடிக்கடி வெளியூர் சென்று வருவதும், கையில் புதிய போனை வைத்திருந்ததையும் அவர்கள் வசித்து வந்த பகுதியை சேர்ந்த அக்கம் பக்கத்தினர் கவனித்து காவல் துறையில் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் குழந்தையை விற்றது தெரியவந்துள்ளது. இந்த செயலை செய்த தம்பதியரான ஜெயதேவ் கோஷ் மற்றும் சதி தற்போது போலீஸ் கஸ்டடியில் உள்ளனர். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் இருப்பதாகவும் தகவல்.

அந்த தம்பதியரிடம் பணம் கொடுத்து குழந்தையை வாங்கிய பிரியங்கா என்பவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமும் வாக்குமூல பெறப்பட்டுள்ளது. “முதலில் குழந்தை தாய் மாமா வீட்டில் இருப்பதாக எனது மகனும், மருமகளும் தெரிவித்தனர். பின்னர் தான் குழந்தை பணத்துக்காக விற்பனை செய்யப்பட்ட தகவலை நான் அறிந்து கொண்டேன். அந்த பணத்தில் தான் அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்” என ஜெயதேவ் கோஷின் தந்தை காமாய் சவுத்ரி தெரிவித்துள்ளார். தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்கள் இருவரும் புண்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஜெயதேவும், அவரது மனைவி சதியும் குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளனர். அந்த பணத்தில் புதிய போன் மற்றும் பயணம் என உலா வந்தனர். குழந்தை இல்லாமல் அவர்கள் மாற்றத்தை கண்டு போலீஸில் தெரிவித்தோம். அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் இது தெரியவந்தது” என லட்சுமி என்பவர் தெரிவித்துள்ளார். இவர் ஜெயதேவ் வீட்டுக்கு அருகில் வசித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in