

கோவை: கோவை மசக்காளிபாளையம் செங்குட்டை வீதியைச் சேர்ந்தவர் சதாசிவம் (60). பால் வியாபாரி. கடந்த சில நாட்களுக்கு முன்னர், இவரது வீட்டில் இருந்த 15 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் தொகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
புகாரின் பேரில் சிங்கா நல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்ததில், ஒரு பெண் சதா சிவம் வீட்டுக்குள் நுழைவது தெரியவந்தது. விசாரணையில், அவர் கரூர் மாவட்டம் வெங்கமேட்டைச் சேர்ந்த தர்ம ராஜ் மனைவி ரமணி (33) என்பதும், கோவை கணபதியைச் சேர்ந்த வினையா (33) என்பவருடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இருவரையும் போலீஸார் கைது செய்தனர். போலீஸார் கூறும்போது, ‘‘ரமணியின் கணவர் உயிரிழந்து விட்டார். 2 குழந்தைகள் உள்ளனர். ரமணி, திருட்டு வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் இருந்த போது, வினையா என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர், வாடகைக்கு வீடு கேட்கச் செல்வது போலவும், உறவினர் வீட்டை தேடி வந்தது போலவும் நடித்து பூட்டப் பட்டிருக்கும் வீடுகளை குறி வைத்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். ரமணி மீது திருப்பூர், கரூர், திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருகிறோம்’’ என்றனர்.