

சென்னை: சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட முக்கியரயில் நிலையங்களில் பயணிகளிடம் செல்போன் திருட்டுசம்பவம் அடிக்கடி நடைபெறுவதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க ரயில்வே கூடுதல் டிஜிபி வனிதா உத்தரவிட்டார். ரயில்வே காவல் கண்காணிப்பாளர் பொன்ராமு மேற்பார்வையில், ரயில்வே டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் தனிப்படை போலீஸார் குற்றவாளிகளைத் தேடிவந்தனர்.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சந்தேகப்படும் வகையில், சிறுவன் உட்பட 2 பேர் சுற்றித் திரிவதை சிசிடிவி கேமரா மூலமாக, ரயில்வே போலீஸார் கண்டனர். இதையடுத்து, இருவரையும் பிடித்து விசாரித்தபோது, இவர்களில் ஒருவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அனில் குமார் நோனியா(23) என்பதும், மற்றொரு நபர் சிறுவன் என்பதும் தெரியவந்தது.
மேற்கு வங்கம் மாநிலத்திலிருந்து கடந்த 20-ம் தேதி விமானத்தில் சென்னைக்கு வந்துதங்கி, பல ரயில் நிலையங்களில் செல்போன்களை திருடி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் ரயில்களில் திருடிய 22 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அனில்குமார் நோனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். பிடிபட்ட சிறுவன் கெல்லீஸில் உள்ள கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டார்.
செல்போன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களைப் பிடித்த தனிப்படை போலீஸாரை காவல் கண்காணிப்பாளர் பொன்ராமு வெகுமதி வழங்கி பாராட்டினார்.