Published : 27 Jul 2023 06:52 AM
Last Updated : 27 Jul 2023 06:52 AM
விருதுநகர்: விருதுநகரில் கும்பலால் வெட்டப்பட்ட மருதுசேனை அமைப்பின் மாநிலப் பொருளாளர் நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். இதுதொடர்பாக 15 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
விருதுநகர் மேலரத வீதியைச் சேர்ந்தவர் குமரன் (56). நகராட்சி ஒப்பந்ததாரர். மருதுசேனை அமைப்பின் மாநிலப் பொருளாளராகவும் இருந்தார். நேற்று முன்தினம் மாலை விருதுநகர் மீன்மார்க்கெட் அருகே தனது அலுவலகத்தில் இருந்த குமரனை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது. தடுக்க முயன்ற உறவினர்கள் ராம்குமார் (33), மகாலிங்கம் மனைவி ரூபி(36) ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது. காயமடைந்த மூவரும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் குமரன் நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார்.
விருதுநகர் எஸ்.பி. ஸ்ரீனிவாசபெருமாள் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்களில் இருந்த பதிவுகள் மூலம் ஆய்வு செய்ததில் கொலையாளிகள் கூலிப்படையினர்என தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: நகராட்சியில் ஒப்பந்தம் எடுப்பது தொடர்பாக மையிட்டான்பட்டியைச் சேர்ந்த குரு மகன்களான ஞானசேகரன், விக்ரமன், சந்திரசேகர் தரப்புக்கும் மருதுசேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன் தரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. ஜூன் 18-ல் காரைக்குடியில் ஞானசேகரன்மகன் வினித் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆதிநாராயணன் கைது செய்யப்பட்டார்.
வினித் கொலை வழக்கில் குமரன் பெயரும் சேர்க்கப்பட்டது. ஆனால், போலீஸார் விசாரணைக்குப் பிறகு குமரன் பெயரை நீக்கிவிட்டனர். இருப்பினும் ஞானசேகரன் தரப்புக்கு குமரன் மீது விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், வினித் கொலைக்கு பழிக்குப் பழியாக குமரன் கொலை செய்யப்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
இக்கொலை வழக்கு தொடர்பாக பால்பாண்டி, அரவிந்தராஜ், சந்திரசேகர், ஞானசேகரன், விக்ரமன், அமிர்தசங்கர், அமிர்தராஜ், ஹரிஹரன், சிவபிரகாஷ் மற்றும் 20 முதல் 25 வயதுள்ள 6 கூலிப்படையினர் உட்பட 15 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT