

வேலூர்: முதலமைச்சர் தனிப்பிரிவு ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி திமுக ஒன்றியச் செயலாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய சென்னையைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளை கடந்த சில நாட்களாக, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரி சிவக்குமார் பேசுவதாக கூறி ஒருவர் தொடர்பு கொண்டு பேசிவந்துள்ளார்.
அப்போது, அந்த நபர் உங்கள் மீது புகார்கள் வந்துள்ளன. நீங்கள் சென்னை வந்து என்னை சந்திக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி உள்ளாட்சி பிரதிநிதிகளை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிலர் போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், கணியம்பாடி திமுக ஒன்றியச் செயலாளரும், கணியம்பாடி ஒன்றிய குழு துணைத் தலைவருமான கஜேந்திரன் என்பவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடர்பு கொண்ட மர்மநபர் சென்னைக்கு வருமாறு மிரட்டல் விடுத்துள்ளார்.
பலரை மிரட்டி பணம் பறிப்பு: இதுதொடர்பாக, வேலூர் கிராமிய காவல் நிலையத்தில் கஜேந்திரன் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சுபாஷ்(29) என்பதும், இவர் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலரை மிரட்டி பணம் பறித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சுபாஷை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.