

சிவகாசி: பெங்களூருவைச் சேர்ந்த குட்கா கடத்தல் கும்பலைச் சேர்ந்த 5 பேரை சிவகாசியில் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகாசி மீனம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக குட்கா விநியோகித்த செந்தில் என்பவரை டிஎஸ்பி தனஞ்செயன் தலைமையிலான தனிப்படை போலீஸார் கடந்த வாரம் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை ஒரு கும்பல் கொண்டு வந்து, சிவகாசியில் நேரடியாக விநியோகிப்பது தெரியவந்தது.
இதையடுத்து டி.எஸ்.பி. உத்தரவின்பேரில் பெங்களூரு கும்பலை பிடிக்க திட்டம் தீட்டப்பட்டது. சிவகாசியை சேர்ந்த செந்தில் மூலமாக பெங்களூருவைச் சேர்ந்த நபர்களிடம் குட்கா மொத்தமாக ஆர்டர் செய்து ரூ.10 ஆயிரம் முன்பணம் செலுத்தினர்.
இதையடுத்து பெங்களூருவில் இருந்து காரில் சிவகாசிக்கு புறப்பட்ட கும்பல் ரூ.5 லட்சம் மதிப்பிலான ஒரு டன் குட்காவை சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்தனர். அவர்கள் தாங்கள் வரும் தகவலை செந்திலுக்கு தெரிவித்தனர்.
சிவகாசி அருகே அனுப்பன்குளம் சந்திப்பில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜா தலைமையிலான தனிப்படையினர் சரக்கு வாகனத்தை மடக்கிச் சோதனையிட்டு ஒரு டன் குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் குட்கா கடத்தி வந்த பெங்களூருவைச் சேர்ந்த அப்ரார் முகம்மது(33), ஹரீஷ் (29), சாஹில்(43), ஷெரீப்(28), லியாகத் (33) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சொகுசு கார் மற்றும் சரக்கு வேனை போலீஸார் பறிமுதல் செய்தனர்.